கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா மைய மாணவர்கள் ஆணி பலகையில் 50 வகையான யோகாசனம் செய்து நோவா உலக சாதனை படைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வினா ஸ்ரீ யோகா மையம் இயங்கி வருகிறது.இந்த யோகா மையத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி மகாராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 50 மாணவர்கள் ஆணி படுக்கையில் 50 வகையான யோகாசனம் செய்து நோவா உலக சாதனை புரிந்தனர்.
இந்நிகழ்ச்சியை சென்னை,எழும்பூர் வட்டாட்சியர் கே.நித்தியானந்தம்,சென்னை வாசன் ஐ கேர் நிறுவனத்தைச் சேர்ந்த மண்டல தலைமை அதிகாரி எம்.லிங்கேஷ், பி.அருண்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு வினா ஸ்ரீ யோகா மைய நிறுவனர் எஸ்.காலத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். இதன் பின்னர், யோகா மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் பல்வேறு வகையான யோகாசன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
நோவா உலக சாதனை நிர்வாக ஆசிரியரும், தமிழ்நாடு யோகா கமிட்டி பொதுச்செயலாளருமான என்.ராஜ்குமார் தலைமையில் வந்திருந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் முன்னிலையில் தொடர்ந்து 50 வகையான யோகாசனங்களை 50 மாணவர்களும் சிறப்பாக செய்து உலக சாதனை புரிந்தனர்.
பின்னர், இம்மாணவர்களுக்கு புது கும்மிடிப்பூண்டி கிராம ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுகுமாரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.எம்.சீனிவாசன், எ.மதன்மோகன் ஆகியோர் பதக்கங்களையும், நோவா உலக சாதனை சான்றிதழ்களையும் வழங்கினர்.
யோகாசனத்தால் உடல் நலம் உள்ள நலன் உள்ளிட்டவைகள் குறித்த பயன்களை எடுத்துக்கூறினர். முன்னதாக அனைவரையும் வினா ஸ்ரீ யோகா மைய துணைத் தலைவர் அர்ச்சனா வரவேற்றார். முடிவில்,யோகா மைய செயலாளர் வித்யா நன்றி கூறினார்.