கும்மிடிப்பூண்டி அருகே சாலை பள்ளங்களை சீர் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால் அவ்வையாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே சென்னைக்கும் வாகனங்கள் பயணிக்கின்றன.
கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் திசையில் சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படாத வகையில் வாகனங்களை ஓரமாக காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
இருவழி சாலையில் சாலையின் ஓரத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதால் ஆந்திரா செல்லும் திசையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. காலை நேரத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிப்பதில்லை எனவும், மழை ஓய்ந்து 1மாதமாகியும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கத்தால் போக்குவரத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.