ஏரியின் அருகே கொடுத்தப்படும் இறைச்சி கழிவுகள்: நீர் மாசு ஏற்படும் அபாயம்
ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இங்கிருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை கொண்டு செல்லப்படுகிறது.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம் கொசவன் பேட்டை ஊராட்சியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அஞ்சாத்தம்மன் கோவில் அருகே சிறிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இங்கிருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று கொசவன் பேட்டை பகுதியில் உள்ள நான்குக்கு மேற்பட்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளில் தண்ணீரை சேமித்து காலை, மாலை என இருவேளைகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், வீடுகள், இறைச்சி கடைகளில் வெளியேறும் குப்பைகளை ஏரியின் அருகே சாலை ஓரம் கொட்டி செல்வதால் இந்தக் கழிவுகள் ஏரி நீரில் கலக்கும் அபாயம் உருவாகி உள்ளது. இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
பெரியபாளையம்-புதுவயல் சாலை என்பதால் அவ்வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தல் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த ஏரியை சுற்றி வேலி அமைத்து இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த ஏரி பகுதியில் குப்பை கொட்ட கூடாது என்று ஊராட்சியின் சார்பில் அறிவிப்பு பலகை வைத்தும், இதனை பொருட்படுத்தாமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதுபோன்று செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.