கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!
தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஒபுலபுரத்தில் இயங்கிவரும் ஷேரன் பிளைவுட் தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கான்ஷாம் மாஹிர் (31). இவர் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரி செய்ய முற்பட்டுள்ளார்.
அப்போது அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை தொழிற்சாலை நிர்வாகம் முதலுதவி செய்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.