கும்மிடிப்பூண்டி: அம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகை கொள்ளை!
கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அங்காளம்மன் பரமேற்வரி கோவில் உள்ளது.
கிராம மக்கள் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஆடி மாத வழிபாடு என்று பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.