உலகக் கோப்பை சிலம்பம் போட்டிக்கு தேர்வான அரசு கல்லூரி மாணவி
கேரளாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் அரசு கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி- ஏகவள்ளி தம்பதியர், இவர்களுக்கு தமிழினி, எழில் மதி, அறிவரசு ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் முத்த மகள் தமிழினி ஆரம்பப் பள்ளி பருவத்தில் இருந்து நீளம் தாண்டுதல் குண்டு எறிதல், ரன்னிங் வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்.
நாளடைவில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மீது ஆர்வம் கொண்ட தமிழனி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள வரதராஜன் சிலம்பாட்ட கலைக்கூடத்தில் வினோத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாவது இடமும், பெண்கள் பிரிவில் ஹை ஜெம்பில் முதலிடமும் பிடித்தார்.
அதையடுத்து பள்ளிப்படிப்பை முடித்த தமிழினி சக மாணவர்களைப் போல டிப்ளமோ, இன்ஜினியரிங், தொழில் கல்லூரி என்ன வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் தொழிற்கல்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டதால் அரசு சார்ந்த விளையாட்டு கல்லூரிகளில் சேர முடிவெடுத்து 2020- ல் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்கோட்டையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொக்கோ, புட்பால், ஹேண்ட் பால், வாலிபால், கபடி, கிரிக்கெட், ஆக்கி, சிலம்பம், களரி, கராத்தே, பாக்சிங், கிக் பாக்சிங், போன்ற அனைத்து விளையாட்டுகளும் பயிற்சி பெற்று வந்தார் .
பின்னர் தமிழக அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டு இறுதியில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அளவில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்ற 20 மாணவர்களில் இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் ஒருவராக தமிழினி தேர்வாகி தற்போது தமிழகம் சார்பில் மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதத்தில் கேரளாவில் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பீகார், ஒரிசா, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் தமிழினி சிலம்பம் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றார். இதனால் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை சிலம்பப் போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் தமிழினி.
சிலம்பம் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வான தமிழினிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.