பெரியபாளையம் நேதாஜி நகர் பகுதியில் சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்

பெரியபாளையம் நேதாஜி நகர் பகுதியில் சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.;

Update: 2023-06-30 09:52 GMT

சிதறி கிடக்கும் குப்பை.

பெரியபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் வழியிலே இரண்டு நாட்களாக அகற்றப்படாத குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில். பெரியபாளையம் ஊராட்சி நேதாஜி நகர் பகுதியில் இருந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் குளத்தின் அருகே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து சேகரித்து கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களை வைத்து நாள்தோறும் அப்புறப்படுத்துவது வழக்கம்.

ஆனால் இரண்டு நாட்களாக இப்பகுதியில் குடியிருப்பு வாசிகள் கொண்டு வந்து கொட்டி செல்லும் குப்பைகளை பணியாளர்கள் அகற்றாததால் அதில் உணவு தேடி அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள், நாய்கள், மாடுகள் குப்பைகளை கிளறுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அன்றாடம் கொட்டும் குப்பைகளை அன்றே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதே நிலைமை நீடித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் அருகில் குளம் இருப்பதால் குப்பை கழிவுகள் அதில் சென்று நீரில் கலந்து நிலத்தடி நீர் மாசு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் எனவே இதுபோன்று ஊராட்சிகளில் பல பகுதிகளில் குப்பைக் கழிவுகள் சாலைகளில் தேங்கி நிற்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News