நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி: எம்எல்ஏ வழங்கல்
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகிய 2 மாணவர்களுக்கு எம்எல்ஏ கோவிந்தராஜ் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி ஊக்குவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் செயல்பட்டு வரும் டி ஜே எஸ் தனியார் பள்ளியில் படித்து தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாதர்பாக்கத்தை சேர்ந்த ஹேமபூஷணம் - லட்சுமி தம்பதியரின் மகன் விகேஷ் கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியிலும், அதேபோல் கவரப்பேட்டை சோம்பட்டை சேர்ந்த பாலு - கல்பனா தம்பதியரின் மகன் இளங்கோ என்ற மாணவன் சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரியிலும் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்து தற்போது படித்து வருகின்றனர்.
இவ்விரு மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலா ரூ.1 லட்சம் வழங்கி ஊக்குவித்தார்.
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்விக் கட்டணம் முழுவதும் ஏற்றுக்கொள்வதோடு ஊக்கத்தொகையும் எம்எல்ஏ வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.