எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-05-20 02:00 GMT

ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊத்துக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாராட்சி, லட்சிவாக்கம், சென்னங்காரணி, காக்கவாக்கம், ஆத்துப்பாக்கம், பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், கன்னிகைப்பேர், திருக்கண்டலம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலை , பைப்லைன் அமைப்பதற்கு ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

கோடுவெளி, கன்னிகைப்பேர், பெரியபாளையம், பாகல்மேடு ஆகிய பகுதிகளில் பைப்லைன் அமைத்தல், சுடுகாடு மதில் சுவர் அமைப்பது போன்ற பணிகளுக்கு ரூ.43 லட்சத்து 72 ஆயிரத்து 628 ஒதுக்கீடு செய்யப்பட்டது என மொத்தம் ரூ 1.58 கோடியில் பணிகள் செய்வதாக ஒன்றிய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்க முப்போகம் விளையக்கூடிய நிலங்களை எடுக்க விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில் மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் ஒன்றிய குழு உறுப்பினர் குழந்தைவேலு பேசுகையில், அனைத்து கூட்டங்களில் அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என்றும் மக்களை பிரச்சனை எவரிடம் சொல்வது என்று குற்றம்சாட்டினர். இதுமட்டுமல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஸ்டாலின் என்பவர் கூட்ட நேரங்களில் முறையாக அறிவிப்பு கடிதம் அனுப்பியும், ஒவ்வொருமுறை விடுப்பு எடுத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது மீது திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சிவாஜி, தனலட்சுமி, சுரேஷ், அதிமுக கவுன்சிலர்கள் குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, லதா, சேமலா, ஜெயலட்சுமி, வித்யாலட்சுமி வேதகிரி, பாமக புஷ்பா, காங்கிரஸ் திருமலை சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News