பெரியபாளையம் அருகே மது போதையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-08-17 02:45 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை இருளர் காலணியை சேர்ந்தவர்களான முருகவேல் ( வயது 34), நாகராஜ் ( வயது 44) ஆகியோர் பாம்பு பிடிக்கும் தொழில் மட்டுமின்றி அன்றாட கிடைக்கின்ற கூலி வேலையும் பார்த்து வந்தனர்.

நண்பர்களான இருவரும் நேற்று வழக்கம் போல வேலையை முடித்து கொண்டு இருளர் காலணிக்கு அருகில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கு ஏறியதும், இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நாகராஜ் பாம்பு பிடிக்க பயன்படுத்தப்படும் உருட்டு கட்டையை எடுத்து முருகவேல் காது மீது பலமாக தாக்கினார். அப்போது அலறித்துடித்த முருகவேல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பழங்குடியின மக்கள் என்பதால் பயந்து போய் உயிரிழந்த முருகவேல் சடலத்தை அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் காவல்துறையினர் இறந்து போன முருகவேல் வீட்டிற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News