திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.;
பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் கொரோனா தொற்று அச்சுருத்தல் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு பக்தர்கள் குவிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17 ந் தேதி தொடங்கி 15 வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் வந்து சனிக்கிழமை இரவு தங்குவர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முடி காணிக்கை செலுத்தி, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வருவர். பின்னர் ஆடு , கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 14 தேதி பொங்கல் முதல் நேற்று முன்தினம் 18 ம் தேதி வரை 5 நாட்கள் கோயில் மூடப்பட்டு இருந்தது. இதில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாததால் பின்புறம் உள்ள வேப்பமரத்திலும், புற்று பகுதிகளிலும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பக்தர்கள் பவானி அம்மனை தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதே போன்று, திருத்தணி முருகன் கோவில் மற்றும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் கோயிலிலும் இன்று முதல் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.