பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
பெரிய பாளையம் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம்.
பெரியபாளையம் பாரதியார் நகர் பகுதியில் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள பாரதியார் நகரில் அங்கன்வாடி மைய கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். பழைய கட்டிடம் என்பதால் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கட்டிடம் வெளிப்புறம் சுற்றி விரிசல்கள் ஏற்பட்டும், அதில் ஆலமரம் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த கட்டிடம் சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீரானது இந்த மையத்தின் வளாகத்தில் தேங்கி நிற்கின்றது. இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட துறையிடம் வலியுறுத்தி எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் அமரும் கட்டிடம் என்பதால் இங்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் நலனை கருதி இந்த கட்டிடத்தை உடனடியாக அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பாரதியார் நகர் பகுதி மக்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆக உள்ளது.