கோவில் வழிபாடு விவகாரத்தில் 7 பேர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-08-13 03:15 GMT

கும்மிடிப்பூண்டி அருகே கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு எட்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது பட்டியலின மக்கள் தங்களுக்கு சொந்தமான பாதையில் கோவிலுக்கு வர கூடாது என மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. 

அன்று முதல் தற்போது வரை எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சரவணன் என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததாக வழுதலம்பேடு சேர்ந்த தேவராஜ், ரகுநாதன், சுப்பிரமணி, ஊராட்சிமன்ற தலைவர் மணிமேகலை, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7 பேர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News