கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட இளைஞர் சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-10-05 10:09 GMT

மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை ராஜி.

கும்மிடிப்பூண்டி அருகே உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்த மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையிடம் போலீஸ் விசாரணை நடத்தி சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜி (63). பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வந்த ராஜி கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட இவரது மனைவி 2ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் (16) என்ற மகன் இருந்தார்.

மணிகண்டன் பெரும்பாலும் ஆடை ஏதும் அணியாமல் சாலையில் சுற்றித்திரிவதும், சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கல் ஏறியும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்த தந்தை ராஜி இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவன் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகவும், தந்தை ராஜி அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டபோது யாரும் முன்வராததால் சுயமாக தனது வீட்டின் பின்புறத்தில் முடிந்த அளவு புதைத்ததாகவும், அதில் கை, கால்கள் வெளியே இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News