கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி அருகே மூன்று பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பாதிரிவேடு, மாதர் பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய மூன்று அரசு பள்ளிகளில்பயிலும் 271 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பாதிரிவேடு அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. எம்.சிவக்குமார் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதாம்மா முத்துசாமி பாதிரிவேடு தலைமை ஆசிரியர் தனஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன், லாரன்ஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.மோகன் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் லாவண்யா மோகன் பாபு, போந்தவாக்கம் நாகராஜ், வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு பாரிவேடு பள்ளியில் பயிலும் 120 மாணவர்களுக்கும், மாதர் பாக்கம் பள்ளியில் பயிலும் 126 மாணவர்களுக்கும், கண்ணன் கோட்டை பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கும் என மொத்தம் 271 மாணவி- மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவாக பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அகஸ்டின் இயேசு ராஜா நன்றி கூறினார்.