ஆரம்பாக்கத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆரம்பாக்கம் பகுதியில் முத்து விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் செலுத்திய ரூ. 50,000 காணிக்கை பணம் திருட்டு போனது.

Update: 2024-01-03 09:56 GMT

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே முக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆரம்பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு கோவில் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்று தரையோடு அமைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆயுதங்களால் உடைத்து அதில் இருந்த சுமார் 50,000 ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மறுநாள் வழக்கம்போல் அர்ச்சகர் கோவில் கதவை திறந்து உள்ள சென்று பார்த்தபோது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News