கும்மிடிப்பூண்டி அருகே ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
நேமலூர் என்.எஸ்.நகரில் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் என்.எஸ்.நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த வியாழக்கிழமையன்று பந்தல்கால் நிகழ்வு தொடங்கியது. பின் வாஸ்து பூஜை பிரவேசபலியுடன், ஆராதனை கரிகோலம் மற்றும் கலச ஸ்தாபனத்துடன், சிலை பிரதிஷ்டை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, பூர்ணாகதி மற்றும் தீபாராதனைக்கு பின் பிரசாத வினியோகம் நடைபெற்றது. கும்பாபிஷேக மூன்றாம் கால பூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜையுடன் சுவாதிஸ்ட ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா பூர்ணாஷூதி, மந்திர ஹோமம் நடைபெற்றது. பின் புரோகிதர்கள் ஹோம குண்டத்தில் இருந்து கொண்டு வந்த கலசங்களை வேத மந்திரம் முழுங்க ஆலய கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஏற்பாடுகளை கே.கிருஷ்ணா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.