கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி மறியல் போராட்டம்
முகரம்பாக்கத்தில் இருந்து பெரியபாளையம் வரை உள்ள சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்மிடிப்பூண்டி அருகே பழுதடைந்த சாலையை சீர் செய்து தர கிராம மக்கள் சாலை நடுவே முள் செடிகளை போட்டு வழி மறைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் முக்கரம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சந்திராபுரத்தில் இரந்து பெரியபாளையம் வரை செல்லும் 4.கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை கடந்த 2005 ஆம் ஆண்டு போடப்பட்டது.கடந்த காலத்தில் பெய்த கனமழை,புயல் காரணத்தினால் சாலை முழுவதும் பழுதடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மோசமடைந்துள்ளது.
இந்த சாலையை சீரமைத்து தர பலமுறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி சுமார் 100.க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு முள் செடிகளை சாலை நடுவே போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் உடனடியாக சாலை அமைத்தால் மட்டும்தான் மறியல் போராட்டத்தை கை விடுவோம் என்று கூறி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் முக்கரம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7. கிராம மக்கள் அன்றாட தேவைக்கும்,பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்களும், மருத்துவமனைகளுக்கு செல்லவும் மக்கள் இசாலையை பயன்படுத்தி வந்த நிலையில். இந்த சாலையை அமைத்து இருபது ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை புயல் காரணமாக சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி சாலையின் நடுவில் அங்கங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நின்று இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், வயதானவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகள் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதை ஆகிவிட்டது எனவும், சாலை அமைத்து 20 ஆண்டுகள் ஆகிய நிலையில் பழுதடைந்த சாலையை தற்போது வரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும், இதனை சீரமைத்து தர வேண்டும் என பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் மனு அளித்தும் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். எனவே தற்போது அதிகாரிகள் தெரிவித்தது போல் ஜனவரி மாதத்தில் சாலை அமைத்து தரவில்லை என்றால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.