சிப்காட் தொழிற்சாலை எந்திரத்தில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வட மாநில இளைஞர் ஒருவர் எந்திரத்தில் அடிபட்டு உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்க வட மாநில இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சில தொழிற்சாலைகளில் அடிமை போல் 16.மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் வட மாநில இளைஞர்கள் சோர்வாகி அடிக்கடி பணி நேரங்களில் கீழே விழுந்து பலியாகும் தொடர் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கேஸ்டிங் டை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாயன் பட்நாயக் (வயது 21)வழக்கம் போல் தொழிற்சாலை பணிக்கு வந்துள்ளார்.
அங்கு டை இயந்திரம் செய்யும் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மிஷின் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அருகில் பணி செய்து கொண்டிருந்த சக தொழிலாளிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டு காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் பாதுகாப்பு துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் வாங்கி தர வேண்டுமென சிப்காட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.