கும்மிடிப்பூண்டியில் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் மகன் கடத்தல் வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-01-29 03:30 GMT

கைது செய்யப்பட்ட சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா ரமேஷ் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி வந்து மாலை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும், பெண் கவுன்சிலர் ரோஜா, மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களது காரிலேயே கடத்திச் சென்றதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது. இதனிடையே தங்களை கடத்திய மர்ம கும்பல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் என்ற பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறி அன்று இரவே பெண் கவுன்சிலர் ரோஜா அவரது மகன் இருவரும் பத்திரமாக வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக பாதிரிவேடு காவல் துறையினர் ஐபிசி 363 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடத்தல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ரோஜாவின் மகன் ஜேக்கபை அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் அங்கே உள்ள செல்போன் டவர் வழியாக சென்ற செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் வயது 26 என்பவரின் எண்ணில் இருந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அழைப்பு வந்தது உறுதி செய்யப்பட்டது.

அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேஷ்குமார் என்பவர் தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், அந்த நிலத்திற்கு உரிய பணத்தை வழங்கவில்லை எனவும் அதே போல் மீதமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு மிரட்டியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெறுவதற்காக சென்றபோது அதிகார பலத்தை பயன்படுத்தி மின் இணைப்பு வாங்க விடாமல் தடுத்து வந்ததாகவும், விவசாயம் செய்ய முடியாததால் விற்பனை செய்ய முயற்சித்த போது நிலத்தை வாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் வேறு வழி இன்றி அதிமுக பிரமுகர் ரமேஷ் குமாரை மிரட்டுவதற்காக பீகார் சென்று கள்ள கை துப்பாக்கி ஒன்றை வாங்கியதாகவும் தனது நண்பர்களான கும்ப்ளியை சார்ந்த சந்தோஷ் 26, ஆந்திர மாநிலம் சுதிர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் 30,

நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் 28, ராச பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் 30 ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டுவதற்காக கூட்டாளிகளுடன் வீட்டில் புகுந்துள்ளனர். ஆனால் வீட்டில் ரமேஷ் குமார் இல்லாததால் அவரது மனைவி, மகன் மற்றும் வீட்டில் இருந்த காரை கடத்திச் சென்றதாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சுரேந்தர் நெருக்கடி அதிகரித்ததால் கடத்திச் சென்றவர்களை விட்டு விடுமாறு தெரிவித்ததை தொடர்ந்து கடத்தப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதிரிவேடு போலீசார் சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்திரசேகர் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News