கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மறுப்பா? அரசு மருத்துவமனையில் எம்பி திடீர் ஆய்வு:

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் எம்.பி ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்; கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று, அவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.;

Update: 2021-05-01 01:37 GMT

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு சாரா மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பல இடங்களில் மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை இல்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில்,  நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, எம்.பி ஜெயக்குமார் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் எம்.பி ஜெயக்குமார் கூறியதாவது:

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். மருத்துவமனையில் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் தேவையான அளவிற்கு இல்லை. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து தரப்பட வில்லை.

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்காக சுமார் 40 படுக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அவை பயன்பாட்டில் இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு என சுமார் 635 படுக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தால்,  நோயாளிகள் இங்கிருந்து சென்னைக்கு போக வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது என்றார்.

இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரிடம் அறிவுறுத்தி மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும், வசதிகளையும் செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Tags:    

Similar News