ஊத்துக்கோட்டை கல்லூரி மாணவி தற்கொலை: திக கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பில்லி சூனியம் மூடநம்பிக்கை காரணமாக ஆசிரமத்தில் இரவு பூஜைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி ஹேமாமாலினி மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை நிறைவேற்றக்கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில அமைப்புச்செயலாளர் வி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். காஞ்சி மண்டலத் தலைவர் பு. எல்லப்பன், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வெங்கடேசன், திருவள்ளூர மாவட்ட தலைவர் க.ஏ.மோகனவேலு, மாவட்டச் செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க. இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜே.அருள், புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில இணைச் செயலாளர் கே.எம்.விகந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு தலைவர் நீலவாணத்து நிலவன் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.