திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2022-03-11 01:15 GMT

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஓதனவனேஷ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 

திருவையாறு அருகே ஏழூர்த் தலங்களில் மூன்றாவது தலமான திருச்சோற்றுத்துறை அன்னபூரணி அம்பாள் சமேத ஓதனவனேஷ்வரர் கோவிலில்,  பங்குனி உத்திர மகோற்சவத்திற்கான கொடியேற்றம் நடந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயிலில் கொடிமரம் இல்லாத நிலையிலேயே சப்தஸ்தானம் முதலிய பெருவிழாக்கள் நடந்தன.

கடந்த4 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ அன்னபூரணி தர்மசத்திர அறக்கட்டளையின் பரம்பரை அறங்காவலர் கண்ணனின் பெருமுயற்சியினால் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உற்சவக் கொடியேற்று விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்று விழாவில் சூரியனார்கோவில் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலந்துகொண்டார். மேலும், செயல் அலுவலர் (ஓய்வு) கோவிந்தராஜ், கல்கி முரளி, திருவையாறு சிவனடியார்கள் கணேச செல்வ சம்பத்குமார், கயிலை நடராஜ கலைச்செல்வன், பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வரும் 17-ந்தேதி தேரோட்டமும், 18-ந்தேதி காலையில் தீர்த்தவாரியும் மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி மாலை கண்ணாடிப் பல்லக்கில் சுவாமி, அம்பாள் எழுந்தருளலும் விடையார்த்தியும் நடக்கிறது.

Tags:    

Similar News