குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! சூழலுக்கு நண்பன்..!
மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிந்து அதன் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறமுடியும்.;
பூச்சிகளையும் பிடிப்பதுடன் பூச்சிகளையும் கண்காணிக்கும் திறன் கொண்ட மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியினை வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.
மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை இளம் பயிராகவும் கோடை நெல் பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்திலும் உள்ளது. மேலும் உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளது. சித்திரைப் பட்ட உளுந்து தற்போது பத்து நாள் பயிராக உள்ளது.இவ்வாறு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள பயிர்களை சுற்றிலும் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் ஆகிய இரண்டு பூச்சிகளையும் சரியான முறையில் கண்காணித்து பயிர்களை காப்பாற்றவேண்டும்.
அதற்கு ஏற்ற நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறு பூச்சியை பல்வேறு நிலைகளில் பல்வேறு வளர்ச்சி பருவங்களிலும் கண்காணிப்பதோடு கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவது இந்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள்.
ஒட்டு பொறிகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அதிக பூச்சிகளை கவரக்கூடியது. முக்கியமாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈக்கள், பூஞ்சை கொசுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் தாய் பூச்சிகளை எளிதில் கவரும். இந்த பூச்சிகளை அழிப்பதன் மூலமாக அடுத்த கட்ட இனப்பெருக்கம் தவிர்க்கப்பட்டு பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும்.
பூச்சி மருந்து அடிக்காமல் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் இல்லாமல் மண் நீர் காற்று ஆகியன பாதுகாக்கப்படுகிறது. ஒட்டும் பொறி மழை வெயிலால் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டும் பொறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதில்லை. ஒட்டும் பொறியின் இருபுறமும் பசை இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தத்துப் பூச்சிகள், த்ரிப்சுகள், பழ ஈக்கள் மற்றும் இலை சுரங்க பூச்சிகள், வெள்ளை ஈக்கள்,கொசுக்கள், புகையான்கள் போன்றவைகளை மிக எளிதாக பிடிக்க உதவுகிறது.
ஒட்டும் பொறிகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பயிர்களின் வளர்ச்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் கதிர் கொடுக்கும் தருணங்களில் ஏக்கருக்கு பத்து ஒட்டும் பொறிகள் வீதம் பயன்படுத்த வேண்டும்.
நிலத்திலிருந்து நாம் பயிரிட்டுள்ள பயிரின் மேல் பரப்பிற்கு அரை அடி உயரத்துக்கு மேல் இருக்குமாறு உள்ள பூச்சிகளில் மஞ்சள் வண்ண அட்டைகளை கட்டி தொங்கவிட வேண்டும். மஞ்சள் வண்ண பொறிகள் பூச்சிகளை முன்கூட்டியே கண்டறிவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக உதவியாய் இருப்பதோடு மிக சிக்கனமானது.
வயல்களில் நிறுவுவது எளிதானது. குறைந்த பராமரிப்புடன் இயற்கை விவசாயத்துக்கும் ஏற்றது. 250 -1000சதுர அடிக்கு ஒரு மஞ்சள் வண்ண ஒட்டு பொறி வீதம் பயன்படுத்தலாம். 24X7 மணி நேரமும் நமது பயிர்களையும் கண்காணிக்கும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் மஞ்சள் வண்ணப் பொறிகளை
விவசாயிகள் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி செலவினத்தை குறைத்து குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரியை சேர்ந்த 11 மாணவர்கள் மண்டலகோட்டை அருகில் முருகானந்தம் விவசாயி வயலில் உளுந்து பயிருக்கு வரக்கூடிய அஸ்வினி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் மஞ்சள் வண்ணோஒட்டும்பொறிகள் பயன்படுத்துவது பற்றி செயல் விளக்கமாக செய்து காட்டினார்.
மேலும் விவசாயி வீரக்குமார் வயலில் ஏக்கருக்கு பத்து இடத்தில் மஞ்சள் வண்ணப் பொறிகளை வைத்து தாய்அந்து பூச்சிகளும் தத்துப் பூச்சிகளும் மஞ்சள் வண்ண அட்டையில் எளிதாக ஒட்டி பிடிபடுவதை செயல் விளக்கமாக செய்து காட்டினார். ஆவிக்கோட்டை விவசாயி கலைவாணன் கீழக்குறிச்சி இளையராஜா, அசோகன் மற்றும் பழனிவேல் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் முருகேசன் செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.