கருப்பூர் பஞ்சாயத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை..!
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் கருப்பூர் பஞ்சாயத்து விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்பட்டது.;
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் கருப்பூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை விநியோகம் செய்யப்பட்டது.
மதுக்கூர் வட்டாரத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன்செயல்படுத்தப்படும் திட்டத்தில் உளுந்து போன்ற பயறு வகை பயிர்களுக்கு கிலோவுக்கு ரூ50 மானியத்தில் சான்று விதை விநியோகத்தின் கீழ் 45 விவசாயிகளுக்கு கருப்பூர் பஞ்சாயத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் 15 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்பு நீர் பாசன கருவி 100 சத மானியத்தில் தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வரும் இரண்டு விவசாயிகளின் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து ஆக கருப்பூர் இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் மேற்கண்டவாறு சிறப்பு கூட்டம் கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கனகாம்புஜம் அவர்களின் மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் துறை திட்டங்கள் குறித்து ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். வேளாண் உதவி அலுவலர் ராமு பல்வேறு வேளாண் துறை திட்டங்களின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளை பதிவு செய்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் கனகாம்புஜம் விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கினார்.சிரமேல் குடி கிடங்கு மேலாளர் முருகலட்சுமி மற்றும் சிசி அலுவலர் ரம்யா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.