வரப்பில் விளையும் உளுந்துக்கு காவலனாக விளங்கும் பொறிவண்டு..! பூச்சிகளை தடுக்கவேண்டாமா..?
உளுந்து பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் உளுந்து விளைச்சலை அதிகப்படுத்துவதற்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழிகாட்டியுள்ளார்.;
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க எக்டருக்கு ரூ300 வரை மானியம் அனுமதிக்கப்படுவது பற்றி மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ள தகவல்
தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடப்பு ஆண்டில் ஏழு பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு எக்டருக்கு 5 கிலோ உளுந்து வம்பன் 8 சான்று விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது ஒரு எக்டருக்கு ரூபாய் 300அதிகபட்சமாக வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை இத்திட்டத்தின் கீழ் மானியம் பெறமுடியும். இதற்கு விவசாயிகள் நடப்பு பருவத்தில் நேரடி விதைப்பு அல்லது நடவு மேற்கொண்டு இருக்க வேண்டும். வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யும் பொழுது உளுந்து செடியின் மணம் மற்றும் அதன் மஞ்சள் நிற பூக்கள் அதிகமாக நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டுகளை அதிகம் ஈர்க்கும். இதன் மூலம் முதன்மை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திடவும் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் இயலும்.
பொறிவண்டுகள் அசுவினி மற்றும் மாவு பூச்சிகளை சிறப்பாய் கட்டுப்படுத்தும். இவைகள் தங்கள் முட்டைகளை மாவு பூச்சிகளின் மற்றும் அசுவினிகளின் காலனியில் இடும். இதன் மூலம் தாய் பொறி வண்டுகள் தங்கள் இளம் குஞ்சுகளை பசிஇன்றி பார்த்துக் கொள்ளும். தாய் பொறிவண்டுகளை விட லார்வா பருவத்தில் பொறிவண்டுகள் அதிக தீமை செய்யும் பூச்சிகளை உண்ணுகின்றன. முட்டையிலிருந்து முழுமையாக பூச்சியாக மாற 20 நாட்களை இது எடுத்துக் கொள்ளும். இதன் புழு பருவத்தை நான்கு பகுதிகளாக பகுதிக்கு ஐந்து நாள் வீதம் வளர்ச்சி உள்ளது.
முதல் பருவத்தில் ஒரு நாளைக்கு நான்கு அசுவிணிகளை சாப்பிடும். இரண்டாம் பருவத்தில் ஒரு நாளைக்கு 13 அசுவிணிகளை சாப்பிடும் .மூன்றாம் பருவத்தில் ஒரு நாளைக்கு 35 அசுவிணிகளை சாப்பிடும். நான்காம் பருவத்தில் 56 அசுவினிகளை சாப்பிட்டு ப்யூபா என்னும் கூண்டு புழுவாக மாறி பின் பொறிவண்டாக மாறுகிறது.
கூண்டுக்குழு பருவம் ஐந்து முதல் ஏழு நாட்கள் உடையது. தாய் பொறி வண்டுகள் தனது இரண்டு மாத வாழ்நாளில் 300 முதல் 300 முட்டைகளை இடுகிறது. வருடத்திற்கு 5 பரம்பரைகளை உருவாக்கும். பொறிவண்டு தன் வாழ்நாளில் வருடத்திற்கு 5000 அசுவினிகளை உண்ணும். இது தனது முட்டைகளை தொகுப்பாக முப்பது வீதம் இடும். வளர்ந்த பொறிவண்டு 100-150 அசுவிணிகளை உண்ணும். எனவே விவசாயிகள் ஆடு மாடு கோழிகள் வளர்ப்பது போல தங்கள் வயலுக்கு தேவையான பாதுகாவலர்களான பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளை நாமாக வளர்த்து வயலில் விடுவிக்க லாம்.அதற்கு
மாவுப்பூச்சியை முதலில் தோட்டங்களிலிருந்து கொண்டு வரவேண்டும். இதனை சிவப்பு பூசணியில் வளர்ப்பு செய்யலாம். நல்ல இளம் பூசணிக்காயை தெரிவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நன்றாக கழுவி, பின்பு காயில் காணப்படும் காயங்களை மெழுகு கொண்டு பூசிவிடவேண்டும். மேலும் இந்தக் காயினை 0.5 சத கார்பன்டசிம் என்ற பூசணநோய் கொல்லி மருந்தில் ஒரு நிமிடம் ஊற வைத்து நிழலில் உலரவைக்கவும்.
பின்பு இந்த காயில் வெள்ளை நூல் கொண்டு குறுக்கு நெடுக்குமாக சுற்ற வேண்டும். நூல் சுற்றிய சிவப்பு பூசணியை ஒரு 5 செமீ உயர மேடையில் வைத்து தேனை பூச்சிவளர்ப்பு கூண்டுகளில் வைக்கவேண்டும். இந்த கூண்டுகளின் கால்களுக்கு எறும்பு நடமாட்டம் இல்லாமல் இருப்பதற்கு எறும்பு கிணறு வைக்கவேண்டும். பின்பு பயிர்களில் காணப்படும் இளம் சிவப்புமாவுப்பூச்சியின் முட்டைப் பையினை எடுத்து காயின் மேல் வைக்கவும். இதிலிருந்து வரும் தவழ்வான்கள் காயின் பல்வேறு பகுதியில் இறங்கி மூடிவிடும். இதே போன்று காயின் பரப்பு முழுவதும் மாவுப்பூச்சியை படியசெய்து பின்பு அந்தக் காயை பொறி வண்டுகள் வளர்ப்பதற்கும், அதனின் புழுக்கள் வளர்ப்பதற்கும், பொறிவண்டுகள் முட்டையிடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொறிவண்டு வளர்ப்பு
பூச்சிகள் வளர்ப்பு கூண்டுகளில் சிவப்பு பூசணியில் மாவுப்பூச்சிகளை வளரவிட்ட 15 நாட்களில் 100 பொறிவண்டுகளை 24 மணி நேரம் விட வேண்டும். பொறிவண்டுகள் மாவுப்பூச்சி இருக்கும் இடங்களில் தன் முட்டைகளை ஒவ்வொன்றாக அல்லது 4-12 முட்டைகளை தொகுப்பாக வைக்கும். பூச்சிகள் வளர்ப்பு கூண்டுகளில் பொறிவண்டுகளின் நடமாட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட 4-5 நாட்களில் புழுக்களை காணலாம்.
வளர்ந்த புழுக்கள் எல்லா நிலை மாவுப்பூச்சிகளையும் சாப்பிடும். புழுக்கள் வளர்ச்சி பெற்ற கூட்டுப்புழுக்களாக மாறுவதற்கு 13-22 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி நிலைபெறுவதற்கு காய்ந்த இலைகளை கூண்டுகளின் உள் அடிப்பரப்பில் வைக்கவேண்டும். இதில் கூட்டுப்புழுக்கள் கூடி இருக்கும். கூட்டுப்புழுவிலிருந்து வண்டுகள் வெளி வருவது 5-6 நாட்களில் முடிவடையும். வண்டுகளுக்கு மாவுப்பூச்சிகளை இலக்காக செய்து 30 நாட்களில் புதிய வண்டு வெளிவரத் தொடங்கும்.
அதாவது வண்டுகள் முட்டைகளிலிருந்து வண்டுகளாக வளர்ச்சி பெறவதற்கு சாரசரியாக 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. புதிதாக வெளிவரும் வண்டுகளை சேகரித்து தனி பூச்சிவளர்ப்பு கூண்டுகளில் 10-15 நாட்கள் வரை வைக்கவேண்டும். இந்த கூண்டினில் வண்டுகள் இனச்சேர்க்கை செய்வது முட்டையிட ஏதுவான பருவ நிலையை அடைந்து விடும். இந்த வண்டுகளுக்கு உணவாக அகார்தூள் (1 கிராம்), சர்க்கரை (20 கிராம்), தேன் (40 மிலி) மற்றும் தண்ணீர் (100 மிலி) ஆகியவற்றை கலந்து வழங்கலாம்.
இதனை தயார் செய்ய 70 மிலி தண்ணீரில் 20 கிராம் சர்க்ரை கலந்து கொதிக்க வைத்து இதனுடன் ஒரு கிராம் அகார் சேர்க்கவும். பின்பு 30 மிலி தண்ணீரில் 40 மிலி தேனை சேர்த்த கலவை சர்க்கரைத் தண்ணீரில் ஊற்றி கலக்க வேண்டும். இந்த திட உணவை சிறு துளியாக பிளாஸ்டிக் அட்டையில் வைத்து வண்டுகளுக்கு கொடுக்கலாம். ஒரு வளர்ப்பு கூண்டுலிருந்து 175 வண்டுகள் வரை பெறலாம். கோர்சைரா முட்டைகளை வண்டுகளுக்கு உணவாக பயன்படுத்தலாம். ஆனால் இதனுடன் மாவுப்பூச்சியின் முட்டைப்பையை வைப்பதன் மூலம் வண்டுகளை முட்டையிட தூண்டலாம். இவ்வாறு பொறி வண்டுகளை வளர்க்கலாம்.
பொறிவண்டுகளை வயலில் பயன்படுத்தல்
உழவர்கள் தங்கள் தோட்டங்களில் காணப்படும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிவண்டுகளையோ, புழுக்களையோ பரப்பி விடலாம். முக்கியமாக தோட்டங்களில் வண்டுகளை பயன்படுத்தலாம். தேவையில்லாமல் இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. ஒரு ஏக்கருக்கு 1000 வண்டுகள் என்ற எண்ணிக்கையில் விடலாம்..
கீழக்குறிச்சியில் நடைபெற்ற நெல் உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் துணை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் வரப்பில் உளுந்து சாகுபடிக்கு மானியத்தில் விதைகள் வழங்கினர்.