விவசாயிகளே பயிர் காப்பீடு செய்யுங்கள்..! நவ.15ம் தேதி கடைசி நாள்..!
மதுக்கூர் வட்டார நெல் விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.;
மதுக்கூர் வட்டார விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து பயன்பெறலாம் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டு நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கேசிமா பொது காப்பீடு நிறுவனமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாளாக நவ.15ம் தேதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சம்பா நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.548 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் ,கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று, விண்ணப்பப்படிவம், முன்மொழிவு படிவம், ஆதாா் காா்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம்.
பொது சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் விவசாயிகளின் அடங்கலில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான முத்திரையை கண்டிப்பாக இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம்செய்யக்கூடாது என்று பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்களில் தொகை செலுத்தும் போது பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து சர்வே எண்களும் அதற்கான பரப்பும் சாகுபடி செய்துள்ள கிராமமும் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து பின் அதற்கான பட்டியலை பெற்று பத்திரமாக வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் காப்பீடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.