வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!
உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஜூன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. மரம் வளர்ப்பின் அவசியம் பற்றியும் பிளாஸ்டிக் தீங்கு பற்றியும் புகையில்லா பூமி பற்றியும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்த பிறகு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.
இந்நிகழ்வை விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை முன்னெடுத்தது.நிகழ்வில் வேளாண்மை அலுவலர் சன்மதி. விதை சான்று அலுவலர் சங்கீதா.விதை ஆய்வாளர் நவீன் சேவியர்.மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள்.அட்மா திட்டஅலுவலர்கள்.பயிர் அறுவடை பரிசோதனை திட்ட அலுவலர்கள்.கலந்துகொண்டனர்.
அடுத்த தலைமுறை இந்த உயிர்க்கோளத்தில் வாழவேண்டும். நல்ல தூய்மையான காற்று, தூய்மையான சூழல், தூய்மையான நீர் , விஷமற்ற நிலம் இவையெல்லாம் இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழமுடியும்.
பூமியைக் காப்பதின் அவசியம்
நமது எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ள முதற்பணி நாம் நம் பூமியை காப்பாற்றுவதே. அது அவசர பணி. அசந்துவிட்டால் நம்மை அழைத்துச் சென்றுவிடும் இயற்கை. மக்கள்தொகை அதிகரிப்பால் அதற்கேற்ப நாம் பல விரிவாக்கங்களை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் தொழில்மயமாக்கல் விரிவடைகிறது.
வனங்களை அழித்து விவசாய நிலமாக்குகிறோம். அதனால் வனவளம் அழிகிறது. வனவளம் அழிவதால் மழை குறைகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் மனித சமூகம் பல சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த, நமது பூமிக்கிரகத்தை பாதுகாக்கவும் அதை வளப்படுத்தவும் மனிதர்கள் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அந்த முயற்சி நீர், நிலம்,காற்று ஆகியவை மாசற்றதாக மாறுவதற்கு தேவையான முன்முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். கார்பன் உமிழ்வைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது, வளரும் தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வை அளிப்பது, மரங்களை நடுவதோடு அவைகளைக் காப்பாற்ற திட்டங்கள் வகுப்பது என எண்ணற்ற பணிகளை செய்யும் கடமையும் பொறுப்பும் நம் முன் நிற்கிறது.
இந்த பூமியை இழப்பதற்கு முன்னர் அவைகளைச் செய்தே ஆகவேண்டும். நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இந்த பூமியை காப்பாற்றியே ஆகவேண்டும்.