இயற்கை இடுபொருள் உற்பத்திக்கு சுழல்நிதி : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!
மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஒரு லட்ச ரூபாய் சுழல் நிதி வழங்கினார்.;
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சூழல் நிதியை குழுவின் தலைவர் வைரவமூர்த்தி, பொருளாளர் வடிவேல் மூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் வழங்கினார். அருகில் மதுக்கூர் வேளாண் இணை இயக்குனர் திலகவதி உள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் உயர் அலுவலர்களின் கண்காணிப்புக்கு பின் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அளவில் சுழல் நிதி, இயற்கை இடுபொருட்களை பிற விவசாயிகளுக்கும் விற்பனை செய்வதற்காக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனரின் வழிகாட்டுதல்படி மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு செயல்பட்டு வருகிறது. அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு, வேளாண் துணை இயக்குனர், மத்திய திட்டம் ஈஸ்வர் மற்றும் மாநிலதிட்டம் சுஜாதா ஆகியோரின் அறிவுரைப்படி அமுத கரைசல் ஜீவாமிர்த கரைசல் மீன் அமினோ அமிலம் மூலிகை பூச்சி விரட்டி போரான் எருக்கு கரைசல் பஞ்சகவ்யா மண்புழு உரம் போன்றவைகளை தயாரித்து தற்சார்பு முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இயற்கை இடுபொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து, பின்னர் பிற விவசாயிகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் குழுவுக்கான வருமானத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
அதிக விவசாயிகளை இயற்கை விவசாய முறை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஒரு லட்சம் ரூபாய் சுழல் நிதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மூலம் இன்றைய குடியரசு தினத்தன்று, தலைவர் வைரவமூர்த்தி, பொருளாளர் வடிவேல் மூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் ரூபாய் ஒரு லட்சத்துக்கான சுழல் நிதியினை வழங்கினார்.
வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மற்றும் வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சுஜாதா குழு உறுப்பினர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு இயற்கை இடுபொருள்களை அதிகளவில் விற்பனை செய்திடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர்.
வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் அத்திவெட்டி இயற்கை விவசாயிகள் குழுவினை செயல்படுத்திட அவர்களின் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இன்றைய நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் உதவி வேளாண் அலுவலர் சுரேஷ் உடனிருந்தனர்.