நிலக்கடலையில் அதிக மகசூல் பெறணுமா? ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்துங்க..!
நிலக்கடலை பயிரில் நிறைய மகசூலுக்கும் நிறைவான லாபத்திற்கும் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்யவேண்டுமாய் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.;
அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவமூர்த்தியின் அமுதக்கரைசல் ஜீவாமிர்த கரைசல் மீன் அமினோ அமிலம் தயாரிப்புகளை தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் பார்வையிட்டார்.
மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் உளுந்து மற்றும் நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் மேற்கொண்டுள்ளனர். நிலக்கடலையில் விதைப்பு முதல் அறுவடை முடிய உள்ள பல்வேறு வளர்ச்சி நிலைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் சொந்த செலவில் தற்சார்பு முறையில் நிலக்கடலைக்கு தேவையான உரத்தேவையினை இயற்கை முறையில் சந்திப்பதோடு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியையும் தர இயலும்.
பயிருக்கும் மண்ணுக்கும் ஜீவனுள்ள அமுதமாக விளங்கும் ஜீவாமிர்தத்தை தயாரிப்பது மிக எளிது.10 கிலோ பசுஞ்சாணம் மாட்டு கோமியம் 10 லிட்டர் இரண்டையும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அத்துடன் ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை கலக்கவும். ரசாயன உரம் படாத எருக்குழிஅருகில் அல்லது வரப்பு மண் ஒரு கிலோவினை இக் கரைசலுடன் சேர்க்கவேண்டும்.
ஏதேனும் சிறுதானிய பயிர் மாவு 2 கிலோவினை கடைசியாக கலந்து நிழலான பகுதியில் 3 நாட்கள் காற்று புகாமல் வைத்திருந்து பின் பயன்படுத்தலாம். இக்கரைசலை ஏழு நாள் வரை விவசாயத்துக்கு பயன்படுத்தமுடியும். ஒரு ஏக்கருக்கு தேவையான 200 லிட்டர் கரைசலை பாசன நீருடன் கலந்து விடுவதன் மூலம் வயல் முழுமைக்கும் ஜீவாமிர்த கரைசல் பரவி விடும்.
ஜீவாமிர்தத்தை நேரடியாக பயிர்கள் மீது தெளிக்கக் கூடாது. விதைப்பு செய்ததிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை நீர்ப்பாசனத்தில் கலந்து விடுவதன் மூலம் சிறந்த பயிர் வளர்ச்சி கிடைக்கும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலத்தடியில் உள்ள மண்புழுவானது தனக்கேற்ற சூழல் உருவாவதால் மண்ணின் மேற்பரப்பு க்கு வந்து தனது உழவு பணியை இயற்கையாக செய்வதால் மண்ணின் மேல் பரப்பு மென்மையாக மாறும்.
மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கும். நீர்பிடிப்பு தன்மையும் அதிகரிக்கும். பசுவின் சாணமா அதிக அளவில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை கொண்டது .மேலும் தேவையான தழைச்சத்தையும் கொடுக்கிறது மாட்டு கோமியத்தில் அதிக தழைசத்து உள்ளது.வெல்லம் மாவுச்சத்துக்கான மூலமாக செயல்படுவதுடன் கரைசலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறது.
இதில் சேர்க்கப்படும் சிறுதானிய மாவு அல்லது பயறு மாவு நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அவரவர் வயலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருக்குவதற்கு வளர்த்தெடுப்பதற்கு ஜீவாமிர்த கரைசலில் வயல் மண் சேர்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை வழங்குவதன் மூலம் மண் சத்து மிகுந்த மண்ணாக மாறுகிறது.
இதற்கான செலவு ரூ400 மட்டுமே ஆகும். முக்கியமாக நிலக்கடலை பயிரின் பூக்கும் நிலை மற்றும் வேர்கடலைவளர்ச்சி போன்ற தருணங்களில் ஜீவாமிர்தத்தை வேருக்கு அருகில் பாய்ச்சுவதன் மூலம் வேர்கடலை செடியின் முழுசத்து தேவையும் சந்திக்கப்படுவதோடு அதிக பூக்கள் மற்றும் அதிக காய்கள் உண்டாகிறது.
இதனால் உற்பத்தி திறன் இயற்கை மற்றும் நிலையான முறையில் அதிகரிப்பதற்கான ஒரு வழி ஆகிறது. பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.எனவே தரமான நிலக்கடலை மகசூலும் திரட்சியான கடலையும் கிடைக்கிறது. உரசெலவு இன்றி உயர் மகசூல் பெற ஜீவாமிர்தகரைசலை அனைத்து பயிர்களுக்கும் அனைத்து விவசாயிகளும் தயாரித்து பயன்படுத்தலாம்.
மதுக்கூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவின் மூலம் அமுதக்கரைசல் ஜீவாமிர்த கரைசல் பஞ்சகாவியா மற்றும் மீன் அமினோ அமில கரைசல்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் குழுவின் தலைவர் வைரவ மூர்த்தி, பொருளாளர் வடிவேல் மூர்த்தி மற்றும் செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.