கும்பகோணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை

அனிதா தினந்தோறும் குழந்தைகளை அழைத்து சென்று வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது

Update: 2021-10-17 14:30 GMT

கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கார்த்திக்

கும்பகோணம் அருகே குமரன்குடி கிராமத்தில் கார்த்திக் என்பவரால் கொன்று புதைக்கப்பட்ட அனிதாவின் உடல் தோண்டி எடுத்து நிகழ்விடத்திலேயே உடற்கூராய்வு நடத்தப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தை சேர்ந்த டேவிட் ஆரோக்கியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி அனிதா ( 32). இவர்களது இரண்டு குழந்தைகளையும் மானம்பாடி கிராமத்திலேயே குடும்பத்துடன் கவனித்து வந்தார். அனிதாவின் இரண்டு குழந்தைகளையும் மானம்பாடி அருகே திருப்பனந்தாளில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு கம்ப்யூட்டர் கற்றுத்தர அனிதா தினந்தோறும் குழந்தைகளை அழைத்து சென்று வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.



நாளடைவில் கார்த்திக் அனிதாவிடம் இருந்து சுமார் மூன்று லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே கடந்த 12ஆம் தேதி அனிதா கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். கம்ப்யூட்டர் வகுப்பிலேயே குழந்தைகளை விட்டுச்சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.  கம்ப்யூட்டர் வகுப்பில்   இருந்த குழந்தைகளை அனிதாவின் தந்தை சேவியர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அன்று இரவு வரை அனிதா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அனிதாவின் தந்தை சேவியர்  திருப்பனந்தாள் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் சென்டரில் இருந்த  கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணையை செய்ததில் கார்த்திக், அனிதாவை கொன்று குமரன்குடி என்ற இடத்தில் கொன்று புதைத்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அனிதா புதைக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறை கும்பகோணம் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மற்றும் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் நேரில் சென்று சடலத்தை தோண்டி எடுத்தனர். அந்த இடத்திலேயே அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் கைது செய்யப்பட்டார். மேலும் கார்த்திக்கின் தந்தை பொன்னுசாமி, சகோதரர் சரவணன், மனைவி சத்யா ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.எதற்காக அனிதாவை கார்த்திக் கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News