காஞ்சிபுரத்தில் ஓட்டுனரை தாக்கி கார் கடத்தல்: குற்றவாளிகளை விரட்டி பிடித்த காவலர்
காஞ்சிபுரத்தில் ஓட்டுனரை தாக்கி கடத்தப்பட்ட காரை, பட்டுக்கோட்டையில் போலீசார் சாலையில் விரட்டிபிடித்து காரை கைப்பற்றினர்.;
காஞ்சிபுரத்தில் ஓட்டுனரை அடித்து தள்ளிவிட்டு கடத்தப்பட்ட காரை, பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் சாலையில் விரட்டிபிடித்து காரை கைப்பற்றினர். காரில் இருந்து அருவா, கத்தி, மூன்று மொபைல்கள் பறிமுதல். ஒருவர் கைது, மற்றொருவர் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் வாடகைக்கு காரை எடுத்து உள்ளனர். இந்நிலையில் காரின் ஓட்டுநர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றபோது, காஞ்சிபுரம் புறவழிச்சாலையில் வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி இருவரும் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி காரில் இருந்து சாலையில் தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர். உடனடியாக ஒட்டுநர் காரின் உரிமையாளர் பிராகாஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழகம் முழுவதும் கடத்தப்பட்ட கார் குறித்து அனைத்து தகவல்களையும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் இன்று மாலை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணனுக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலம் கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு மருந்து வாங்குவதற்காக அவரது ஜீப் ஓட்டுநர் காவலர் பிரசாந்த் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது கடத்தப்பட்ட கார் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து, காரை துரத்தி சென்று உள்ளார். காவல்துறையினர் வருவதைப் பார்த்த குற்றவாளிகள் இருவரும் காவலரை தாக்கி தள்ளிவிட்டு, தப்பி ஓடி உள்ளனர். ஆனால் காவலர் பிரசாந்த் சாலையில் கீழே விழுந்தும், இருவரையும் தூரத்தி சென்று சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் உதவியுடன் தப்பி ஓடிய வேல்பாண்டி என்பவரை மடக்கிப்பிடித்தனர். இதில் வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார். பிறகு காரையும் வேல்பாண்டியையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட காரில் இருந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை காவலர் பிரசாந்த் துரத்தி சென்று பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.