கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
'கோடை காலத்தில் குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெற உளுந்து சாகுபடி செய்ங்க' என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோடை உளுந்து சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி திட்டம் வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நெல் உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு அதற்கேற்ற உற்பத்தி இலக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி ஆணையரின் உத்தரவுப்படி வட்டார வாரியாக கோடை பயிர் சாகுபடிக்கு மட்டும் ஏப்ரல் மே ஜூன் மாதத்துக்கான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுக்கூர் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 250 எக்டர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் உதவியுடன் தேவையான உளுந்து வம்பன் 8 சான்று பெற்ற விதைகள் தேசிய விதை கழகத்தின் மூலம் பெறப்பட்டு வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி அவர்கள் வழிகாட்டுதலின்படி விதை கிராம திட்டத்தின் கீழ் கிலோரூ48 மானியத்தில் திரவ உயிர் உரத்துடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
கிராம வாரியாக வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் தினேஷ் மற்றும் ராமு ஆகியோர் குறைந்த அளவு நீரில் குறைந்த காலத்தில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்து பயிர் சாகுபடியை ஊக்குவித்து வருகின்றனர்.
வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் கோடை சாகுபடி செய்யப்படும் பயிர்களின் கிராம வாரியாக பரப்பினை ஆய்வு செய்து வருகின்றனர். எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் கிலோ ரூ.95-98 வரை விலையில் கொள்முதல் செய்யப்படும் லாபகரமான உளுந்து சாகுபடியை மேற்கொண்டு அதிக வருமானம் பெற மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.