நெல்லுக்கு எது சிறந்த நுண்ணூட்ட சத்து தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
மதுக்கூர் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நன்மை தரும்விதமாக வேளாண்மை உதவி இயக்குனர் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நெல்லுக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துகளையும் சரியான அளவில் வழங்கும் தமிழ்நாடு அரசின் 11ம் எண் நெல் நுண்ணூட்டச் சத்து என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது கோடை சாகுபடி நடைபெற்று வரும் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் நடவின்போதும் நடவு நட்ட 20 நாட்களுக்குள் நெற்பயிரின் வளர்ச்சிக்கு அடிப்படையான நுண்ணூட்ட சத்துக்களை சரியான அளவில் சரியான விகிதத்தில் கலந்து பயிருக்கு அளிப்பது மிக முக்கியமாகும்.
விஞ்ஞான முறைப்படி பல்வேறு ஆய்வுகளுக்கு பின் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நுண்ணூட்டச் சத்துகளின் தேவையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நுண்ணூட்டகலவையே 11 ம் எண் நெல் அடிஉர நுண்ணூட்ட கலவை.
3% சிங்க் 1.6 % இரும்புச்சத்து 0.4 சத தாமிரம் எனும் காப்பர்சத்து4சதம் மெக்னீசியம் 0.2சதம் போரான்0.3% மேங்கனீஷ் ஆகிய ஆறு அடிப்படை நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளன. ஆயத்த ஆடைபோல் அனைத்து நெல் விவசாயிகளின் நுண்ணூட்ட தேவையை சந்திக்கும் வகையில் உள்ளது.
இது பயிரின்வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு நெல் மகசூல் அதிகரிக்க தரமான நெல் மணிகள் உற்பத்தியையும் இது உறுதி செய்கிறது. வருடத்துக்கு மூன்று முறை சாகுபடி செய்யும் நெல் வயல்களில் தொடர்ச்சியாக நுண்ணூட்ட சத்துக்களை பயிர் எடுத்துக்கொண்டே இருப்பதால் தேவையான அளவு நுண்ணூட்டத்தினை மண்ணில் இடுவது மிக அவசியம்.
ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் நடவின்போது அல்லது நடவு நட்ட 20 நாட்களுக்குள் நெல் நுண்ணூட்டத்தினை மணலுடன் கலந்து தெளிப்பது அவசியமாகும். நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையானது மண்ணின் கார அமில நிலைகள் பருவ கால ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள வெப்ப நிலைகளுடன் தொடர்புடையது.
நடவு செய்த 2-4 வாரத்திற்கு பின் இளைய மற்றும் நடுத்தர வயது இலைகளில் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அது சிங்க் சல்பேட் பற்றாகுறையாகும்.இளம்இலைகள் வெளுத்த பச்சைநிறத்திலும் இலைநரம்புகளில் குளோரோசிஸ் ஏற்பட்டு
உருவாகும் அடுத்தகட்ட இலைகள் வளரச்சியின்றி சிறுத்து காணப்பட்டால் அது இரும்புச்சத்து பற்றாக்குறை ஆகும். இலைநுனிகள் வெண்மையாகவும் சரியாக விரியாமலும் உருட்டப்பட்டு இருந்தால் கதிர்கள் உருவாவது தாமதமாகும். இது போரான் சத்து பற்றாக்குறையினால் வருவது. அதிக வெப்ப நிலை உள்ள காலங்களில் நெல் வயல்களில் போரான் சத்து பற்றாக்குறை எளிதாக காணப்படும்.
தண்ணீர் குறைவாக உள்ள மேட்டு நில பகுதிகளில் இலைகள் வெளுத்து பயிரின் வளர்ச்சி குறைந்திருந்தால் அது மாங்கனிஸ் சத்தின் பற்றாக்குறை ஆகும். பிரியாத இலைகளும் ஊசி போன்ற இலைநுனிகளும் காப்பர் சத்து பற்றாக்குறையை காண்பிக்கிறது. மேற்கண்ட அனைத்து நுண்ணூட்டசத்து பற்றாக்குறைகளையும் சரி செய்யக்கூடிய ஒரே நுண்ணூட்டகலவை, தமிழ்நாடு அரசின் 11ம் எண் நெல் நுண்ணூட்டக் கலவை மட்டுமே.
எனவே விவசாயிகள் பயிரின் நிலைஅறிந்து பயிரின் வயிறு ஆகிய மண்ணின் தன்மைஅறிந்து தேவையான நுண்ணூட்டத்தினை சரியான நேரத்தில் இடுவதன் மூலம் நிறைந்த நெல்மகசூலையும் தரமான நெல்மணிகளையும் பெறுவது உறுதி என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.