வேளாண் திட்டங்கள், செயல்பாடுகள் : சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடி விளக்கம்..!
தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படும் விதம் குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.;
விவசாயிகளுக்கு டிராக்டர்கள்,கொத்து கலப்பைகள் மற்றும் பண்ணை குட்டைகள், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் வேளாண் துறையின் புதிய திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் தென்னையில் பரப்பு விரிவாக்கம் திட்டம் போன்றவை குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் அனைத்து துறை தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு 50சதவீத மானியத்தில் நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் வழங்குதல், வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்து கலப்பைகள் வழங்குதல் மற்றும் இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்க பயிற்சி போன்றவை வட்டார அளவில் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் தென்னையில் பரப்பு விரிவாக்கம் மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துவக்கி வைத்துள்ள திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் சார்ந்த வேளாண் துறை தோட்டக்கலை துறை வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை துறை மற்றும் மார்க்கெட் கமிட்டி சார்ந்த துறை தலைவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த நிதியாண்டில் உடனடியாக செயல்படுத்தப்பட உள்ள அனைத்து மானிய திட்டங்கள் மற்றும் அது செயல்படுத்தப்படும் விதம் போன்றவை குறித்து நேரடியாக எடுத்துக் கூற அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ஐயம்பெருமாள், மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செங்கோல் மற்றும் பட்டுக்கோட்டை மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வேதமுத்து ஆகியோர் நேரடியாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரையிடம் அவரவர் துறையின் திட்டங்கள் குறித்து நேரடியாக எடுத்துக் கூறினர்.
சட்டமன்ற உறுப்பினர் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகளுக்கான கள அளவிலான இடர்பாடுகள் போன்றவை பற்றியும் கேட்டறிந்தார். விதைஆய்வாளர் நவீன் குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான குறுவை விதை தேவை போன்றவை பற்றி எடுத்து கூறினார்.
மதுக்கூர் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பசுந்தாளுர போஸ்டர்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி, உளுந்து சாகுபடி குறித்த தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனரின் பிரசுர வெளியீடுகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.