புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மாமனாரை சுட்டுக்கொலை செய்த மருமகன் கைது
குடும்பத்தகராறு காரணமாக மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மருமகன் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராசு (72) திமுக பிரமுகர். இவரது 2வது மகள் லதாவை அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 1991 முதல் 2011 வரை ராணுவத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன் தற்போது கந்தர்வக்கோட்டை சிவன் கோவில் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு வேறு சில பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருப்பது தெரிந்து அவரது மனைவி லதா கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லதா தனது குழந்தைகளுடன் தந்தை சைவராசு வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இதன்பிறகு தனது முறையற்ற தொடர்பை விடாத ரவிச்சந்திரன் தனது மனைவி பெயரில் உள்ள சொத்துகளை தன் பெயருக்கு எழுதிக் கேட்டு சைவராசு வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில். இன்று சைவராசு தனியாகவும் ரவிச்சந்திரன் தனியாகவும் நீதிமன்றம் சென்றனர். மாலையில் சைவராசு ஏறிய பேருந்தில் ரவிச்சந்திரனும் ஏறியுள்ளார். இதனால் ஆதனக்கோட்டையில் இறங்கிய சைவராசு அடுத்த பேருந்தில் ஏறி கந்தர்வக்கோட்டை வந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ரவிச்சந்திரன் சைவராசு வீடு அருகே தனது இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் தயாராகக் காத்திருந்து அருகில் வரும்போது தலையில் சுட்டதில் மாமனார் சைவராசு தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சைவராசோடு வந்த மற்றொருவரையும் சுட முயன்றபோது அதனைத் தடுத்ததால் துப்பாக்கிக் கட்டையால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு சைவராசு குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் ஓடி வருவதற்குள் தப்பி ஓடிய முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
சொத்து பிரசனை காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாகவே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன், மாமனார் சைவராஜை மிரட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில், சைவராஜ் இதுகுறித்து காவல்துறையிலும் புகாரளித்திருந்தார். இருப்பினும் அவரிடம் இருந்த துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்று கூறி, கந்தர்வக்கோட்டை போலீசாரை கண்டித்து சைவராஜின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரவிச்சந்திரன் தனது மாமனாரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்கு 2023 டிசம்பர் வரை உரிமம் உள்ளது. சொத்திற்காகவும் தன் மாமனாரையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.