பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புபணி தொடக்கம்
கறம்பக்குடி நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட 2 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.;
கந்தர்வகோட்டை தொகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புபணி இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு உத்தரவுப்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி வழிகாட்டுதலில் கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குள்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.கணக்கெடுப்பு பணியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.இதில், கறம்பக்குடி, நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் பள்ளியிலிருந்து இடை நின்ற 6 முதல் 14 வயதிற்குள்பட்ட 2 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
பின்னர், மாணவிகள் இருவரும் பிலாவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முன்னிலையில் சேர்க்கப்பட்டனர். உதவி திட்ட அலுவலர் அரசின் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கினார். ஆய்வில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், கறம்பக்குடி வட்டார மேற்பார்வையாளர் அர்ஜுனன், ஆசிரியர் பயிற்றுநர் பெரியசாமி, தலைமையாசிரியை உமாமகேஸ்வரி, ஆசிரியர் கமலக்கண்ணன் மற்றும் தன்னார்வ ஆசிரியை விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.