உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற வாசிப்பு இயக்கம்
கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது;
உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெற இருப்பதால் அதனை சிறப்பாக நடத்துவதற்கு கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவில இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசும்பொழுது, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக புத்தக கண்காட்சி நடைபெற்றது.
அப்பொழுது மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு மூலம் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு சிறப்பாக நடைபெற்றது. அது போல உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற இருக்கின்ற வாசிப்பு இயக்கத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கு தொடர் வாசிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய வாய்ப்புகளை வாசிப்பு பயிற்சி வழங்குகிறது. தொடர்ந்து வாசித்து வந்தால் கதை கட்டுரைகள் எழுதக்கூடிய வாய்ப்புகளையும் மாணவர்கள் பெறலாம். பாட புத்தகத்தை தாண்டிய வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
தினந்தோறும் நூலகங்களுக்கு செல்லக்கூடிய பழக்க வழக்கங்களை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். நமது பள்ளி நூலகங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் பல்வேறு தலைப்புகளில் உள்ளது அதனை மாணவர்கள் தினந்தோறும் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும் பொழுது பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகின்ற நூல் விமர்சனம் என்ற கல்வி இணை செயல்பாடுகளில் தாங்கள் வாசித்த புத்தகங்கள் விமர்சனம் செய்யலாம் என்று பேசினார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வாசித்தனர். ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி,செல்வி ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.