கலைத்திருவிழாவை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை

கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழாவை எம்எல்ஏ சின்னதுரை தொடங்கி வைத்தார்;

Update: 2023-10-20 12:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  வட்டார அளவிலான கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:  கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குகடந்த முறை நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது நுழைவாயில் அமைக்கப்படும் என்று தெரிவித்தேன்.

அதுபோல தற்போது நுழைவாயில் அமைத்து தரப்பட்டது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் தரமான சாலை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் கந்தர்வகோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட தேவையான அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கவே நான் என்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியை அதிகமாக ஒதுக்கியுள்ளேன்.  இதன் மூலம் கந்தர்வகோட்டை சுற்று வட்டாரம் கல்வியிலும், கலையிலும் சிறப்பிடம் பெற்று விளங்க தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். புதுக்கோட்டையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்விடங்கள் இருப்பதை நம்முடைய ஆய்வாளர் ஆசிரியர் மணிகண்டன் ஆய்வுகளிலே நிறைய கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

பின்னாளில் ஒலிம்பிக் அளவில் கூட சென்று பரிசு பெறுவதற்கு தமிழக அரசு நடத்தும் இதுபோன்ற கலைத்திருவிழாக்கள் உதவும். குழந்தை பருவத்திலேயே மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, ஆசிரியர்கள் உதவியுடன் மெருகூட்டி குழந்தைகள் பின்னர் வாழ்வில் சிறந்து விளங்க வழி வகை செய்ய வேண்டும். அனைவரையும் ஊக்கப்படுவத்தில் தான் குழந்தைகளின் உண்மையான வளர்ச்சி இருக்கிறது. எனவேவிளையாட்டு, கலை, இலக்கியம், எழுத்து, நாடகம் என அனைத்து துறைகளிலும் யாருக்கு என்ன ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும்.

கலைத் திருவிழாவில் கலந்து கொள்வதன் மூலம் அனைத்து குழந்தைகளும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல் மூலமும், அறிவார்ந்தவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை உள்வாங்கி குழந்தைகள் மென் மேலும், அறிவுப்பூர்வமாக வளர்வதற்கு இதுவாய்ப்பாக இருக்கும். மேலும் தமிழகத்திலே திரைப்பட துறையாக இருந்தாலும், நாடக துறையாக இருந்தாலும், கிராமிய கலை நிகழ்ச்சியாக இருந்தாலும்,எழுத்து, கவிதை, கட்டுரை அனைத்திலும் கலைக்கோட்டையாக விளங்குவது புதுக்கோட்டை என்றும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆளுமைகள் அதிகம் உயர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே தான் எழுத்தில், நடையில், பேச்சில், கலையில் உயர்ந்திருக்கிற புதுக்கோட்டை மாவட்டம் கலைத்திருவிழாவில் கடந்த முறை மாநில அளவில் மூன்றாம் இடத்தில் இருந்தது . இந்த முறை புதுக்கோட்டை மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு கந்தர்வக்கோட்டை பகுதி மாணவ, மாணவிகள் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் படிப்பிலும் ஆர்வம் காட்ட வேண்டும். என்றும் கற்றலில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை, கலைத் திருவிழாவில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டும் எனவும் மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல், திறமைகள் செயல்வடிவம் பெறும் என்றும், கந்தர்வகோட்டை கல்விக்கோட்டையாக மாற வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம் என்றும் அதனோடு கலைக்கோட்டை யாகவும் மாற்ற வேண்டும் என்றும் பேசினார்.

இந்நிகழ்வில் கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்தம்மாலதி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன், பழனிவேல், ராமஜெயம், விஜயலெட்சுமி ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார், ராஜேஸ்வரி, பாரதிதாசன் ஆசிரியர்கள் மணிகண்டன், ரகமதுல்லா, ராஜமாணிக்கம், பாக்கியராஜ், தவச்செல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.நிறைவாக புதுநகர் தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News