கனமழை: பள்ளிக் கட்டிடங்களின் சாவியை உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்

குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்;

Update: 2021-11-10 09:30 GMT

கரம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள் இயற்கை உணவுகளை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி

உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பள்ளிக்கட்டிடங்களின் சாவிகள் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பள்ளிக்கட்டிடங்களின் சாவிகள் ஒப்படைக்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி  தெரிவித்தார்.

கனமழை காரணமாக கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறையினரால் 45 நரிக்குறவரின குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளித் தலைமையாசிரியரிடம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் பேரூராட்சி சார்பில் அவர்களுக்கு காலை உணவினை வழங்கினார்.நிகழ்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம்  சாமிசத்தியமூர்த்தி மேலும் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் காரணத்தினால்,  மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி அறிவுரையின்படி, தலைமை ஆசிரியர்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சிபிரதிநிதிகளிடம் பள்ளிக்கட்டிடங்களின் சாவிகள் ஒப்படைக்க வேண்டும். மேலும், அவர்களிடம் மின்மோட்டார் மற்றும் குடிநீர் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அனைத்து வகுப்பறைகளிலும் மின் சாதனங்களின் பாதுகாப்பினை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள் ,பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாத வகையில்  பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.

Tags:    

Similar News