துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
கந்தர்வகோட்டை ஒன்றிய முதுகுளம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துளிர் திறனறிவு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசியதாவது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிவுத் தேர்வை தமிழக முழுவதும் அனைத்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி பயன்பெற கூடிய வகையில் நடத்தி வருகிறது. இத்தேர்வினை முதுகுளம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி முதல் நிலையில் தேர்வு பெற்றதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடிய பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செய்து வருகிறது. துளிர் 35 வருடங்களைக் கடந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. துளிரின் வளர்ச்சியும், ”துளிர்” இதழும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு மிகுந்த பெருமைகளை தரக்கூடியதாக உள்ளது. துளிர் திறனாய்வு நிகழ்வு முக்கியமான சாதனைகளை புரிந்து வருகிறது. அரசு போட்டித்தேர்வுகளுக்கு அடுத்ததாக மிக அதிகமான பேர் பங்கேற்கும் நிகழ்வாக துளிர் திறனாய்வு நிகழ்வு வளர்ச்சி பெற்றுள்ளது.
அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளாக துளிர் மாத இதழ், சிறகு ,ஜந்தர் மந்தர் ,அறிவு தென்றல் உள்ளிட்ட அறிவியல் இதழ்களும், தமிழில் அறிவியல் சார்ந்த புத்தகங்களும் வெளியிட்டு வருகிறது. அதனை மாணவர்கள் தொடர்ந்து வாசித்து அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்கும் விதமாக ஏன்? எதற்கு ? எப்படி? என்ற கேள்விகளை கேட்க வேண்டும் எனவும், மந்திரமா? தந்திரமா? நிகழ்வுகள் மூலம் மூடநம்பிக் கைகளை ஒழித்து அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான மாநாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு பெறும் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டிகளிலும், அதில் தேர்வு பெறும் ஆய்வுக்கட்டுரைகள் தேசிய அளவில் நடைபெறும் மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டு இளம் விஞ்ஞானிகளாக அறிவிக்கப்படுவாரகள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க கூடிய வாய்ப்புகளையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கி வருகிறது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்க துளிர் திறனறிவுத் தேர்வு, வினாடி ,வினா உள்ளிட்டவற்றையும்யும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது என்றார் அவர்.
மாணவர்களுக்கு துளிர் புத்தகங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் தலைமை ஆசிரியர் அவர்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் ஆசிரியர் சரண்யா இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியை ரம்யா மோல் நன்றி கூறினார்.