கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில், 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள செங்கோட சின்னணுள்ளி அடுத்த கல்லுகான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முத்தம்மாள், இவர்களுக்கு பவித்ரா, காவியா என்ற மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சண்முகம் - முத்தம்மாள் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முத்தம்மாள், தனது குழந்தைகள் காவியா, தனுஷ் ஆகியோருக்கு, பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துள்ளார். பின்னர் முத்தம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள், குழந்தைகள் காவியா, தனுஷ் ஆகிய 2 பேரையும் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.