குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம்.;
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இணைத்து கொள்வது என்ற திட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசின் நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அலுவலக குறிப்புபடி, மாற்றுத்திறனாளிகளை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களாக ஏற்க வேண்டும். இதனடிப்படையில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசும் NPHH மற்றும் PHH ரேஷன் கார்டுகளை மாற்றி AAY குடும்ப கார்டுகளாக மாற்றி ,மாதந்தோறும் 35 கிலோ அரிசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அந்தியோதயா அன்ன யோஜனா மத்திய அரசின் திட்டப்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உறுப்பினர்களுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.