தருமபுரி காவிரி ஆற்றில் ரூ.250 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்: மக்கள் மகிழ்ச்சி
தருமபுரி காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.250 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி சேலம் மாவட்டத்திற்கு இடையில் காவிரியாறு மேட்டூரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகமரை ஒட்டனூர் பகுதிகளில் இருந்து காவிரி ஆற்றை பரிசலில் கடந்து, பண்ணவாடி கோட்டையூர் பகுதிகளுக்கு மக்கள் அன்றாடம் சென்று வருகின்றனர்.
இதில் ஈரோடு, கோவை, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு, காவிரி ஆற்றை பரிசல் மூலமாக கடந்து சென்று வருகின்றனர். இந்த காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் இருந்தால் வெளியூர் வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் வசதியாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வழங்கினார். அதில் சேலம், தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒட்டனூர் முதல் கோட்டையூர் வரை 800 மீட்டர் தூரத்திற்கு சுமார் 250 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு இன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பரிசலில் சென்று பொதுமக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினார். அப்பொழுது நீண்ட நாட்களாக பரிசலில் பயணம் சென்று வரும் தங்களுக்கு தமிழக முதல்வரால் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்தி தரவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் இத்தனை ஆண்டுகாலமாக மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்த தங்களுக்கு பாலம் கட்டப்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.