கவியருவிக்கு நீர்வரத்து குறைந்து விட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி அருகே கவியருவிக்கு நீர்வரத்து குறைந்து விட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதிகள் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆழியார் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குரங்கு அருவி என்ற கவியருவி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக விளங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால், வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று முதல் ஆழியார் கவியருவி மூடப்பட்டது. மீண்டும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அறியாமல் வந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திரும்பிச் செல்கின்றனர்.