சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சோதனை சாவடி திறம்பட செயல்படவும், வாகன தணிக்கையை சீர் செய்வதற்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை காவல் நிலைய பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இன்னும் சோதனை சாவடி திறம்பட செயல்படவும், அங்கு நடைபெறும் வாகன தணிக்கையை சீர் செய்வதற்கு ஏற்ப சோதனை சாவடி இடத்தை அமைப்பதற்கும் அறிவுரை வழங்கினார். மேலும் சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும், வாகன தணிக்கையை ஒழுங்குபடுத்தி திறமையாக செயல்படுத்தி குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் என்றும் வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆனைமலை காவல் ஆய்வாளருக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து அருகில் தகுந்த இடத்திற்கு மாற்றி அமைத்து புதுப்பொலிவுடன் சீரமைக்க அவர் அறிவுரை வழங்கினார். மேலும் சிசிடிவி கேமராக்களை பேருந்து நிலையத்திலும், அதன் சுற்றுப்பகுதியிலும் அதிகளவில் நிறுவ வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்பு புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு அங்கு செயல்படும் காவல் உதவி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், 24 மணி நேரமும் காவல் உதவி மையத்தில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் பயணிகளை தவிர்த்து சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் கூறினார்.
மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அங்கு பழுதடைந்த சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்து அதிகளவில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்களை காவல் உதவி மையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.