கோவையில் நகை பறிப்பு குற்றவாளிகள் கைது ; 8 மணி நேரத்திற்குள் பிடித்த போலீசார்!
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நாகரத்தினத்திடம் குளிர்பானம் கேட்பது போல், இரண்டு சவரன் தங்க நகையை பறித்து செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நாகரத்தினத்திடம் குளிர்பானம் கேட்பது போல், இரண்டு சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக நாகரத்தினம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் புலன் விசாரணை செய்து வந்தனர்.
காவல் துறையினர் விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி (26) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குட்டி என்கிற கவியரசு (20) ஆகியோர் இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர்களிடமிருந்து திருடிய இரண்டு சவரன் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோல சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.