வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேர் கைது ; 22 சவரன் நகைகள் பறிமுதல்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 22 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்;

Update: 2024-03-12 13:15 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியில் நித்யநதி (53) என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் நித்யநதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த சுமார் 22 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யநதி இது சம்மந்தமாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து புலன் விசாரணை செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார் என்கிற குருமூர்த்தி சுந்தரேசன் (72), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முருகன் என்கிற ராமு (55), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்கிற ராஜா (50) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற ராஜேஷ்(42) ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நகைப் பறிப்பு வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட 22 சவரன் தங்க நகை மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.


Tags:    

Similar News