கோவை கருமத்தம்பட்டியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இரண்டு பேர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் 3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-29 14:44 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படி காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கருமத்தம்பட்டி புதூர் அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சயன் பிரபிரா நாராயணன் ஹல்டர் (35) மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (32) ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 3.5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில், இந்தாண்டில் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 32 நபர்கள் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 16.51 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News