சூலூரில் நண்பரிடம் 10 லட்ச ரூபாய் பணத்தை திருடிய 5 பேர் கைது

பழைய இரும்பு உதிரி பாகங்கள் வாங்கி தருவதாக கூறி, வரவழைத்து பணத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி சென்றுள்ளார்.;

Update: 2024-02-05 14:30 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருபவர் முகுந்தன் (41). இவர் தனது நண்பர் சம்பத் மூலம் அறிமுகமான கணேசன் என்பவர் பழைய இரும்பு உதிரி பாகங்கள் வாங்கி தருவதாக கூறி, கடந்த 29 ம் தேதியன்று தென்னம்பாளையம் அருகில் முகுந்தனை வரவழைத்து 10 இலட்ச ரூபாய் பணத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி சென்றுள்ளார்.

இது தொட‌ர்பாக முகுந்தன் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தனிப்படை காவல் துறையினர் விசாரணையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கணேசன் (36), சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் (44), கோவை இந்திரா நகரை சேர்ந்த சுஜித் (29), சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (29) மற்றும் முருகேசன் (31) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடி சென்ற பண‌ம் 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றச்செயல்கள் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News